கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (18.04.2023) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன்(கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள், கௌரவ இரா.சாணக்கியன்(பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

கோறளைப்பற்று வாழைச்சேனை - மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழா - 2023
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளுக்கமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியமும், கிண்ணையடி அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழா 18.02.2023 ம் திகதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு வாழைச்சேனை - கிண்ணையடி அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கலை அரங்கில் கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிண்ணையடி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மா.குலேந்திரரூப சர்மா அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு. ஆர்.சிவகுமார், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டுகேந்தினி சிறிஸ்கந்தராசா, தமிழ் சைவ பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திரு.கலைவாணன் ஐயா, இலண்டன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்ற மட்டக்களப்பு மாவட்ட சமூக நல தொண்டர் திரு.க.துரைராஜா மற்றும் இம்மன்றத்தின் உறுப்பினர்கள், கிண்ணையடி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், மகா விஸ்னு ஆலயம், மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் மற்றும் கிராமமட்ட அமைப்புக்கள், கோறளைப்பற்று பிரதேச ஆலயங்களின் நிருவாகிகள், கலைமன்றங்கள், அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கண்விழித்து இரவு முழுவதுமாக கலை நிகழ்வுகளை பார்த்து ரசித்தனர்.
இந்நிகழ்வில் கிரான் கிறிஸ்தாலயா நடன கலைமன்றம், மட்டக்களப்பு சிவசக்தி பஜனை மன்றம், கோறளைப்பற்று பிரதேச அறநெறிப்பாடசாலைகள், கலை மன்றங்கள், பாடசாலை மாணவர்களின் கரகாட்டம், கோலாட்டம், சிவதாண்டவம், புஸ்பாஞ்சலி, கதம்ப நடனம், வில்லுப்பாட்டு, நாடகம், சிவகீர்த்தனை, பரதநாட்டியம், நடனங்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சைவசமய பொது அறிவு வினாவிடைப்போட்டிகள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளின் சிறப்பு சொற்பொழிவுகள் முதலான நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. மேலும் இந்நிகழ்வில் விசேட அம்சமாக மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூடத்தினரால் ஆலயத்தில் விரதமிருந்த அடியார்களுக்கு உருத்திராக்கம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலண்டன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட சமூகநலத் தொண்டர் திரு. க.துரைராஜா ஐயா அவர்களால் இந்நிகழ்வினை தலைமைதாங்கி நடாத்திய கோறளைப்பற்று பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய கலைமன்றங்கள், அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள், நெறிப்படுத்திய ஆசிரியர்கள், மற்றும் சைவசமய பொது அறிவு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோறளைப்பற்று வாழைச்சேனை – சமுதாய சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பழத்தோட்டம்- 2023
சமுதாய சீர்திருத்த திணைக்களத்தினால் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுதாய சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களை நல்வழிப் படுத்துவதத்காக சமூக சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களைக் கொண்டு சிறிய அளவிலான பழத்தோட்டம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு 07.03.2023 காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டதுடன் சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் திரு.தயானந்தன், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.K.பத்தினிதாசன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். சமூகத்தில் தவறுகள் இழைத்தவர்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அவர்களது உளமாற்றம் மற்றும் சீர்படுத்தப்பட்ட நேர்த்தியான வாழ்க்கை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதற்காக ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வின் முதற்கட்டமாக பழமர நடுகை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் வாழை,அன்னாசி போன்றவை நடப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையானது சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

கோறளைப்பற்று வாழைச்சேனை – 75 ஆவது சுதந்திரதின நிகழ்வு - 2023
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 04.02.2023 அன்று காலை 8.20 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.R.சசிகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலாவது நிகழ்வாக பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் 75 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளான நமோ நமோ மாதா- நூற்றாண்டுக்கு ஒரு படி எனும் கருப்பொருளுக்கு அமைவாக நாட்டு மக்களுக்கான சேவையினை எவ்வாறு விரிவு படுத்தமுடியும் என்பதனையும், தேசிய சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தினையும் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 25.01.2023 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு பங்களிப்பு செய்த குருதி கொடையாளிகள், அலுவலக சூழலில் சிறப்பாக பசுமை உற்பத்தியை மேற்கொண்டவர்கள், அரச அலுவலர்களுக்கான இரண்டாம் மொழி(சிங்களம்) பயிற்சியினை பூர்த்தி செய்தவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சூழல் நேய பசுமை வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக்கொண்டு மர நடுகையும் இடம்பெற்றது. இறுதியாக, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாற்சோறு வழங்கப்பட்டு நிகழ்வானது இனிதே நிறைவேறியது.















