கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும்
"திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தின விழா 2026 மிகவும் சிறப்பாகக் கொண்டாட்டப்பட்டது.
இவ்விழா கடந்த 14/10/2026 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு, கோறளைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவின் ஒரு சிறப்பம்சமாக, World Vision Lanka திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று சிறுவர் சபையினால் வெளியிடப்பட்ட "அமைதி தேடும் சிறு உள்ளங்கள் - மன அழுத்தமும் அதன் பாதிப்பும்" (CAY-LED RESEARCH FY26) எனும் தலைப்பிலான ஆய்வு நூல் அதிதிகளினால் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர் திருமதி த. சசிகுமார், நிருவாக உத்தியோகத்தர் திருமதி பு. ஜெயக்குமார் ,சமூர்த்தி தலைமை முகாமையாளர் திருமதி சி.தேவமனோகரி, சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி க.வினோதினி, பதவி நிலை உத்தியோகத்தர் திரு. சு. ரமேஸ், கல்குடா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களாக World Vision , Ceri நிறுவனம் , Brandina, Haniel Child
Development பிரதிநிதிகள் , நல்லாயன், விவேகானந்தா, பெத்தேல் சிறுவர் இல்ல முகாமையாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் சபை தலைவர் , முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சிறுவர் தின விழாவில் முன்பள்ளிச் சிறார்களின் அழகான ஆக்கதிறன் நிகழ்வுகள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சேர்ந்த சிறுவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரதேச சிறுவர் சபைச் சிறார்களின் திறமை வெளிப்பாடுகள் என்பன இடம்பெற்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படது விழாவின் கலை நிகழ்ச்சிகள் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.
இறுதியாக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு அ.அழகுராஜ் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.




*கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா 2026*
எமது கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா நிகழ்வானது இன்று 19.10.2026 திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் ஏனைய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக வளாக ஆதிவலம்ரி விநாயகபுர் ஆலய பிரதமகுரு. சிவஸ்ரீ மாணிக்கம் குலேந்திரரூப குருக்கள், அறநெறி பாடசாலை மற்றும் கலைமன்றங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நந்திக்கொடியேற்றல், கொடிக்கவி இசைத்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆலய பிரதம குருக்களால் ஆசியுரையும், சிறப்புரையும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவிகளினால் வரவேற்பு நடனம், பேச்சு, பஜனை, காவடி நடனம் நிகழ்வுகள் போன்றவை இடம்பெற்று இறுதியாக நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வானது பூஜை வழிபாடுகளுடன் பி.ப 1.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.



கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
===========================================================================================
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (17.09.2026) இன்று காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Dr.இளையதம்பி சிறிநாத், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு ராஜரெட்ணம் கங்காதரன், திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மௌன இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையானது பிரதேச செயலாளர் திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களால் நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் கூட்டறிக்கையானது அங்கிகரிக்கப்பட்டு, சென்ற கூட்டத்தின் மீளாய்வு இடம்பெற்றது. ஒவ்வொரு திணைக்களங்களிலும் தற்போது கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டன. எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
மேலும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில்பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பிரதேச மட்ட சவால்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், எதிர்கால திட்டங்களை விரைவுபடுத்த பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அத்துடன் எல்நினோ தாக்கம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களால் உரிய அதிகாரிகலுடன் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டமானது பி.ப 2.00 மணி அளவில் இனிதே நிறைவடைந்தது.

கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்
===================================================================================
கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது 25.09.2026 இன்று காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு A.றொபர்ட், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு A.S சசிகரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு R.கங்காதரன், கணக்காளர் திருமதி T.சசிகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி P.ஜெயக்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இரண்டாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, 2026ஆம் ஆண்டு ஐனவரி மாதம் தொடக்கம் 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு திணைக்கள ரீதியான அடைவுகளின் செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், செலவுவிபரங்கள் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் அஸ்வெசும நிதியுதவி திட்டம், சமுர்த்தி முதலீடுகள், சமூக நலத்திட்ட கொடுப்பனவுகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொதிகள், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் செயற்திட்டங்கள் நிதி நிலைமைகள் குறித்து தனித்தனி மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கணக்காய்வு கேள்விகளுக்கு காலவரையறைக்குள் பதிலளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், உள்ளக கணக்காய்வு பிரிவின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உத்தியோகத்தரின் வரவினை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களுக்கு தோன்றுகின்ற இடர்பாடுகளை குறைத்துக்கொள்ளலாம் எனவும் மற்றும் பல காத்திரமான அலோசனைகள் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாரள் மற்றும் தேசிய கணக்காய்வு அத்தியட்சகரினால் வழங்கப்பட்டன.
இக்கூட்டமானது பி.ப 1.00 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.


**சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்-2026**
எமது கோறளைப்பற்று பிரதேசசெயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டமானது (06.08.2026) அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.S.ராஜ்பாபு ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்திப்பணிப்பாளர் திருமதி J.திருச்செல்வம் அம்மணி அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அழைப்பு அதிதிகளாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக ரண்விமன வீடு கையளித்தலும் மற்றும் அவர்களுக்கு ரூபா 10,000.00 பெறுமதியான உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அதிதிகளை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வரவேற்புரையானது தலைமை முகாமையாளரினாலும் தொடர்ந்து தலைமையுரையானது பிரதேச செயலாளரினாலும் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சிப்தொர மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றது. தொழில்பயிற்சி மாணவர்களுக்கான பயிற்சிநெறியை தொடர்வதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. சவிபல கடன் வழங்கல், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல், கொடி விற்பனை (2025, 2026) அதிக பணம் சேகரித்த சமுர்த்தி உத்தியோகத்தரகள், சமூதாய அமைப்புத்தலைவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன மற்றும் கொடி விற்பனை (2023, 2024) நிதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. இறுதியாக முகாமைப்பணிப்பாளரின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.














