கோறளைப்பற்று வாழைச்சேனை- பொங்கல் விழா-2023
தமிழர் தம்மண்ணின் பெருமைக்கும் அவர்தம் மரபுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் அமையப்பெற்ற திருநாள் பொங்கல் விழாவாகும். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவானது 20.01.2023 அன்று காலை 8.30 மணியளவில் முறாவோடை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொது மக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடனும் முறாவோடை கிராமத்தின் சமூக,சமய அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புடனும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அறநெறி பாடசாலை மாணவர்களின் கலாசார பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகிய இவ் விழாவில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி, அலுவலக உத்தியோகத்தர்கள்,அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொது மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவில் தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முகமாக பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் நாட்டுப்புற நடனம்,மயில் நடனம்,காவடி, கும்மி,கோலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பல கலைநிகழ்வுகளும் அரிகி வரும் தமிழர் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் வீர விளையாட்டுக்கலான போர்த் தேங்காய் உடைத்தல்,கரும்பு உடைத்தல் போன்ற பல விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
தமிழர்கள் இயற்கையை நேசிக்கும் வல்லமை கொண்டவர்கள் எனும் அறத்தினை வெளிப்படுத்தும் முகமாக சூரிய வழிபாடும் இவ்விழாவில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதல்களையும் வழங்கினார்.











