கோறளைப்பற்று வாழைச்சேனை - மாட்டு வண்டி பவனியோடு நடைபெற்ற தைப்பொங்கல் விழா -2025
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாசிவன்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஆலயங்கள், கிராமமட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழாவானது 04.02.2025 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு நாசிவன்தீவு பொது மைதானத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி. புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நாசிவன்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த இந்து ஆலயங்களின் நிர்வாகிகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மீனவர் சங்கங்கள்,விளையாட்டு கழகத்தினர், ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக கலாசார பண்பாட்டு ஊர்வலமும் மாட்டு வண்டி பவனியும் நாசிவன்தீவு ஸ்ரீ கணேஷர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் நாசிவன்தீவு கோபாலசிங்கம் வயற்காணியில் பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை செய்யப்பட்டு நாசிவன்தீவு பொது மைதானத்தில் பொங்கல் நிகழ்வானது ஆரம்பமானது. கலாசார பண்பாட்டு பவனியுடன் ஆரம்பமாகி நிகழ்வு நடைபெறும் இடத்தை சென்றடைந்ததும் பிரதான பொங்கல் பானையில் புத்தரிசியிட்டு பிரதேச செயலக பிரிவில் உள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களால் விதம் விதமான சுவையுடைய பொங்கல் பானைகள் வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோறளைப்பற்று பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியாக நன்றியறிதலுடன் இந்நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.











