*பாசிக்குடாவில் கோலாகலமாக இடம்பெற்ற (Wings of East)கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி நிகழ்வுகள்*
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பன்மைத்துவ கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி பாசிக்குடா சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசத்தில் 17.10.2025 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வானது தொடர்ந்து 18 மற்றும் 19 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, கிழக்குமாகாண கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேனகா புவிக்குமார் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் சு. சுதாகரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் பங்குபற்றினர்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு 18 மற்றும் 19 ஆகிய 2 தினங்களிலும் காலை மு.ப 08.30 மணி முதல் பி.ப 08.30 மணி வரை பல்வேறு உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் கலாச்சாரத் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


















