கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்
===================================================================================
கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது 25.09.2026 இன்று காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு A.றொபர்ட், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு A.S சசிகரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு R.கங்காதரன், கணக்காளர் திருமதி T.சசிகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி P.ஜெயக்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இரண்டாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, 2026ஆம் ஆண்டு ஐனவரி மாதம் தொடக்கம் 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு திணைக்கள ரீதியான அடைவுகளின் செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், செலவுவிபரங்கள் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் அஸ்வெசும நிதியுதவி திட்டம், சமுர்த்தி முதலீடுகள், சமூக நலத்திட்ட கொடுப்பனவுகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொதிகள், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் செயற்திட்டங்கள் நிதி நிலைமைகள் குறித்து தனித்தனி மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கணக்காய்வு கேள்விகளுக்கு காலவரையறைக்குள் பதிலளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், உள்ளக கணக்காய்வு பிரிவின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உத்தியோகத்தரின் வரவினை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களுக்கு தோன்றுகின்ற இடர்பாடுகளை குறைத்துக்கொள்ளலாம் எனவும் மற்றும் பல காத்திரமான அலோசனைகள் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாரள் மற்றும் தேசிய கணக்காய்வு அத்தியட்சகரினால் வழங்கப்பட்டன.
இக்கூட்டமானது பி.ப 1.00 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.













